மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி – 7.3.2012

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் எட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது.


பெற்ற உரிமைகளை பேணிக் காக்கவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் இந்நாளை பெண்கள் உரித்தாக்குகின்றனர்.


இந்த நன்னாளில், அனைத்து மகளிர்க்கும் எனது இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண் என்பவள் சக்தியின் உருவம். "மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா" என்று பெண்ணின் பெருமையை போற்றிப் பாடியிருக்கிறார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள்.


"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று முழங்கினார் மகாகவி பாரதியார்.
"வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள், மணவாளன் இறந்தால் மணத்தல் தீதோ"" என்று கைம்பெண் மணத்தை வலியுறுத்தினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.


பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்கப் பாடுபட்டார் ராசாராம் மோகன் ராய்.


பெண்களை அடிமைப்படுத்தியதனால் தான் பாரத நாடு முன்னேறவில்லை என்பதை உணர்ந்து, பெண் விடுதலைக்காக திரு.வி.க. அவர்களும், மகாத்மா காந்தி அவர்களும் பாடுபட்டனர்.உலகத்தில் எந்த நாடும் போற்றாத அளவுக்கு பெண்ணைப் போற்றிடும் நாடு நம் பாரத நாடு.


பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில், நாட்டைத் தாய்த் திருநாடு என்றும், மொழியை தாய்மொழி என்றும், நலம் பயக்கும் நதிகளுக்கு, கங்கை, காவிரி, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி என பெண்பால் பெயர்களை வைத்தும் நாம் மகிழ்கிறோம்.

வாழ்க்கை என்னும் தேர் ஓட வேண்டுமென்றால் இரு சக்கரங்கள் தேவை என்பதை சமுதாயம் உணர வேண்டும். நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காடு பெண்கள் என்று இருக்கும் நிலையில், பெண்ணினம் புறக்கணிக்கப்பட்டால் நாடு முன்னேற முடியாது.
பசு பெண் ஈன்றால் முகம் சிரிப்பவர்கள், தாய் பெண் ஈன்றால் முகம் சுளிக்கிறார்கள். சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், மக்களவையில் நிறைவேற்ற முடியாததால் சட்டமாக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் வகுத்துத் தந்த சமதர்ம சமுதாயக் கொள்கையின்படி, பெண்கள் கல்வி அறிவை பெற்று, அதன் மூலம் வேலை வாய்ப்பை எய்தி, பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில், மகளிர் முன்னேற்றத்திற்கான பல நல்ல திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதன் முதலாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், அனைத்து மகளிர் அதிரடிப் படை மற்றும் அனைத்து மகளிர் காவல் படை, தாயின் முதலெழுத்தை குழந்தையின் தலைப்பெழுத்தாக பயன்படுத்துதல், மகளிருக்கு பெருமை சேர்க்கும் வகையில் "குடிமகள்" என்னும் சொல்லை பயன்படுத்துதல், வீர தீர பெண்மணிக்கு "கல்பனா சாவ்லா விருது" என பல்வேறு மகளிர் நலன் பயக்கும், பெண்மைக்கு பெருமை சேர்க்கும் திட்டங்கள் எனது முந்தைய ஆட்சி காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் 25,000 ரூபாய் உதவித் தொகையுடன், 4 கிராம் தங்கக் காசும் தற்போது எனது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கான உதவித் தொகையை 50,000 ரூபாயாக உயர்த்தி 4 கிராம் தங்கக் காசு வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.


சமையலறையில் நாளும் உழலும் மகளிரின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில், விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவற்றை எனது அரசு வழங்கி வருகிறது. இளம் பெண்கள் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விலையில்லா ‘சானிடரி நாப்கின்’ வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ‘அவ்வையார் விருது’ என்னும் உயரிய விருது ஒன்றை சிறந்த பெண்மணி ஒருவருக்கு, ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கிட நான் ஆணையிட்டுள்ளேன். இவ்விருது வரும் ஆண்டு முதல் வழங்கப்படும்.

சேயாக, தமக்கையாக, தாரமாக, தாயாக பாரினில் பெண்கள் படைக்கும் பாத்திரங்கள் மகத்தானவை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள் என்பதோடு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி, ஒவ்வொரு பெண்ணும் தடைகளைத் தகர்த்தெறிந்து, தன்னம்பிக்கையைத் தன்வசப்படுத்தி, எதற்கும் அஞ்சாமல் வெற்றி பெற வேண்டும். மண் வளத்தைக் காப்பது போல், வன வளத்தைக் காப்பது போல், நீர் வளத்தைக் காப்பது போல், பெண் வளமும், பெண் உரிமையும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

"பெண்களின் உரிமை பாரதத்தின் வலிமை" என்பதை மனதில் வைத்து, "ஆணும்,பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்"" என்ற மகாகவி பாரதியாரின் வார்த்தைக்கிணங்க, பெண்ணுரிமை ஓங்கட்டும்! பெண்ணடிமை ஒழியட்டும்! என்று நெஞ்சார வாழ்த்தி,

வாழ்வில் எதிர்வரும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, தடைக் கற்களை படிக் கற்களாக மாற்றி, இருளை நீக்கும் ஒளி விளக்காக பாரினில் பெண்கள் உயர்ந்து விளங்கிட, புதிய உலகம் படைத்திட, எழுச்சியுடன் நமது கடமைகளை செவ்வனே ஆற்றுவோம் என்று சூளுரைத்து, எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்

வெளியீடு: -
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், சென்னை.

Post a Comment

Previous Post Next Post