இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2016

அனைத்து செவிலிய சொந்தங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கடந்த பேரிடரின் போது தனியார் துறையினர் தங்களது செயல்பாட்டை எவ்வித முன்னறிவிப்பின்றி நிறுத்திய போது,

பொதுத்துறை அரசு நிறுவனங்கள் மக்களுக்கு அயராமல் சேவை செய்து பெரும்பேறு பெற்றன.

அரசு மருத்துவமனைகளை பெரும்பாலான ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நோயாளிகளின் உடன் அனைத்து நேரமும் இருக்கும் செவிலியர்களின் பணியானது மாற்றம் கொள்ள வேண்டிய தருணம் இது.

அரசின் தவறான கொள்கைகளால் நோயாளிகள் நலன் பாதிக்கப்படும்போது, செவிலியர்கள் சமூக பொறுப்புடன் அதனை எதிர்க்க தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று பெண்கள் சமுதாயம் பற்பல சாதனைகளை சத்தமில்லாமல் நிகழ்த்தி வருகின்றன,  பெண்கள் சட்டங்கள் செய்வதையும், பட்டங்கள் ஆள்வதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை சத்தமாக பேசக் கூட தயங்குகிறோம். அவர்களுக்கு ஆறுதல் கூறாமல் துணிந்து அடிக்க கற்று தர வேண்டும்.

அரசு மருத்துவமனைகளை பாதுகாப்போம்.
சென்ற வருடம் எனக்கு தெரிந்து 2 மருத்துவர்கள், 2 செவிலியர்கள், பல மருத்துவமனை பணியாளர்கள் நான் பணிபுரியும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

சில வாரங்களுக்கு தேவையான Antibiotics மற்றும் அத்தியாவாசிய மருந்துகள் அவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.

ஊழியர்கள் அவர்களின் பணி செய்வதையே பெரும் இழுக்காக நினைக்கின்றனர்.

வார்டு பகுதியில் செவிலியர்களின் பணிச்சுமை அவசியம் இல்லாமல் அதிகரித்து உள்ளது.

எங்கள் மூத்த ஆண் செவிலியர் ஒருவர் கூறுவார்,  "டாக்டர் முதல் துப்புறவு பணியாளர் வரை அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் கூறிக்கொண்டே இருக்க வேண்டும்" என.

இதனால் தான் என்னவோ செவிலியர்களின் பணி இது என அறுதியிட்டு கூற அரசு மறுக்கிறது.

இன்றைய இக்கட்டான நிலையில் அரசு மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

சமுதாய முன்னேற்றம் தேவை:-

ஒரு கலக்டரோ, ஒரு தாசில்தாரோ பணியில் இருக்கும்வரை தான் அவருக்கு அப்பெயர் ஆனால், செவிலியர் எப்போதும் செவிலியர்தான்.

செவிலியர்கள் இல்லாமல் சுகாதாரத்துறை இருக்க முடியாது. பொதுவாக இன்று செவிலியர்களின் பிரச்சனை ஒரு தனி செவிலியரின் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது.

உதாரணமாக ஒரு செவிலியர் தாக்கப்படும் போதோ அல்லது செவிலியர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் போதோ அது அந்த தனி செவிலியரின் தவறாகவே பார்க்கப்படுகிறது.

செவிலியர்கள் பிரச்சனை செவிலியர்களுடைய பிரச்சனை மட்டுமல்ல. அது ஒரு சமூக பிரச்சனை. அனைவரின் பொதுப்பிரச்சனை. செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக ஒன்று பட்டு போராட வேண்டும்.

நோயின் அறிகுறியை எதிர்த்துப் போராடும் நாம், நமது சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படும் போது அதற்கு எதிராக போராட துணியாமல் தனி அறையில் அழுது, பொலம்பி ஆற்றிக் கொள்கிறோம்.

செவிலியர்கள் தனியார் துறையிலும், அரசு துறையிலும் சுரண்டப்பட்டு வருகின்றனர், கொள்ளை முதலாளிகளாலும், அரசியல்வாதிகளாலும் ஆங்கிலேயர் காட்டிய பிரித்தாலும் சூழ்ச்சியை பயன்படுத்தி ஒட்டு மொத்த இளம் செவிலியர்களும் சுரண்டப்பட்டு இரத்தம் சுண்டிய பிறகு விரட்டி அடிக்கப்படுகின்றனர்.

மக்களின் சுகாதார உரிமைக்கான வழிகாட்டு நெரிமுறைகள், மருத்துவமனை விதிகள் முற்றிலும் மீறப்பட்டு கொள்ளை இலாபத்திற்காக மருந்து பொருட்கள் மாபியா நடைபெறுகிறது.

ஆக செவிலியர்களாகிய நாம்,
நம் வேலைகளை மட்டும் பார்க்காமல் நோயாளிகளின் நிலையில் இருந்து யோசித்து "மக்கள் செவிலியர் மன்றம்" அமைத்து

அரசு மருத்துவமனைகளை பாதுகாக்க வேண்டும்,

இளம் செவிலியர்களின் உழைப்புச் சுரண்டலை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தடுக்க வேண்டும்,

மருந்து வணிக மாபியாக்களிடம் இருந்து ஏழை மக்களை பாதுகாக்க வேண்டும்.

வரப்புயர நெல் உயரும் என்பது போல் தனி செவிலியரின் சுய மரியாதை உயர்ந்தாலே ஒட்டு மொத்த துறை உயரும் என்பதில் ஐய்யமில்லை.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2016

ம. உமாபதி
செவிலியர்.

5 comments:

Manikandan Balasubramanian said...

அருமை உமா ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமான வார்த்தை
இந்தியாவில் இந்தியன் இல்லை என்பது போல் அரசு மருத்துவமனைகளில் செவிலியர் ,செவிலியர் வேலை தவிர்த்து அனைத்து வேலையும் செய்து வருகிறோம் ."செவிலியர் மக்கள் மன்றம் "
காலத்தின் கட்டாயம் .வாழ்த்துக்கள்

Unknown said...
This comment has been removed by the author.
Vellathurai Malaiarasan said...

அருமையான வரிகள், எழுத்து வடிவில் மட்டும் நின்று விடாமல் செயல்வடிவம் பெற நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்

Vellathurai Malaiarasan said...

வாழ்த்துக்கள், இவை அனைத்தும் நம்மால் சாத்தியப்பட வேண்டும்

thanga durai said...

செவிலியம் உயர்த்து!
எம் செவிலியம்
இனி உயர்வு பெறும் உன்னால்!!
உன்னை போன்ற நல் எண்ணங்களால்!!!

வாழ்த்துக்கள் தம்பி!!!

Post a Comment

 
l
j