பொருளாதார நலத்தை ஆண்டுக்கொருமுறை சோதிக்கிறோம்

காலண்டரின் பக்கங்கள் தீர்ந்து போய் 2022 முடிய சில மணி நேரங்களே உள்ளன. 




நீங்கள் வருமானம் ஈட்டும் ஆண்டுகளில் ஒன்று குறைகிறது. ஓய்வு பெறும் நாள் இன்னும் சற்று அருகாமையில் வந்துள்ளது

ஆண்டுக்கொருமுறை உடல்நலத்தை சரிபார்க்க மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் நேரத்தையும் பணத்தையும் செலவிடும் நம்மில் எத்தனை பேர் நம்முடைய பொருளாதார நலத்தை ஆண்டுக்கொருமுறை சோதிக்கிறோம்? 

பள்ளிகளில் தரும் ரிப்போர்ட் கார்டும், அலுவலங்களில் நடக்கும் அப்ரைசலும் அர்த்தம் பொதிந்தவை. நாம் எந்த விசயங்களில் வலுவாக இருக்கிறோம், எந்தெந்த விசயங்களில் வீக்காக இருக்கிறோம் – அந்த விசயங்களையும் வலுவானவை லிஸ்ட்டில் சேர்க்க  அடுத்தாண்டுக்கான “ஆக்சன் ப்ளான்” என்ன என்பதையெல்லாம் தெளிவாக அவை விளக்கும். அதே போல் நம் பொருளாதார நிலைமையையும் Self Appraise செய்ய சரியான தருணம் புத்தாண்டு தினம். இதில் நாம் பார்க்க வேண்டியவை 

1. ஆயுள் காப்பீடு
நீங்கள் இதுவரை வைத்திருக்கும் ஆயுள் காப்பீடுகளை ஒரு முறை எடுத்துப் பாருங்கள். தொடரலாமா அல்லது விட்டொழிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் எண்டோமெண்ட் / மணி பேக் / யூலிப் பாலிசிகளை உடனடியாக தலை முழுகுங்கள். ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு டெர்ம் பாலிசி ஐடியல், 10 மடங்காவது அத்தியாவசியம். அதற்கும் கீழே இன்சூர் செய்திருந்தால், மேலும் ஒரு பாலிசி எடுப்பதன் மூலமோ அல்லது பழைய பாலிசியை நிறுத்தி விட்டு மொத்த அமவுண்ட்டுக்கு வேறு பாலிசியையோ எடுங்கள். இந்தாண்டு உங்க சம்பளம் கூடியிருந்தால் காப்பீட்டின் அளவும் கூட வேண்டும். சென்ற ஆண்டில் ஏதேனும் Life Changing நிகழ்வுகள் நடந்திருக்கலாம். பணி புரியும் கணவன் மனைவி மட்டும் இருக்கும் போது குறிப்பிட்ட அளவு காப்பீடு எடுத்திருப்பீர்கள். குழந்தை பிறப்பு அதை மாற்றி விடும், இப்ப அதிக காப்பீடு தேவை என்று உணர்ந்தால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக காப்பீட்டின் அளவை அதிகரியுங்கள்.
 
காப்பீட்டுக்கு ப்ரீமியம் கட்டும் தேதியை முக்கியமான இடத்தில் குறித்து வையுங்கள். இறுதி தேதி வரை காத்திராமல் சீக்கிரமே செலுத்துங்கள் 

2. ஹெல்த் இன்சூரன்ஸ்
 ஆயுள் காப்பீட்டுக்குச் சொன்னவை அனைத்தும் இதற்கும் பொருந்தும். ஏற்கெனவே இருக்கும் காப்பீட்டின் அளவை ரீவிசிட் செய்யுங்கள். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கின்றன எனத் தோன்றினால் கூடுதல் காப்பீடு எடுங்கள். ப்ரீமியம் கட்ட வேண்டிய தேதியை குறித்து வைத்து சீக்கிரமே கட்டி விடுங்கள். இரு காப்பீடுகளிலும் லாப்ஸ் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். 

3. அவசரத்தேவைக்கான கையிருப்பு

கொரோனா சொல்லிக்கொடுத்ததில் மிக முக்கியமானது இது. சேமிப்பு நீண்ட காலத்துக்கானது, அதைத் தவிர எப்போதும் 6 மாத செலவுக்கான பணம் கையிருப்பில் இருப்பது அவசியம். இந்த ஆண்டு குடும்பச் செலவு கூடியிருக்கலாம் அல்லது எமர்ஜென்சி ஃபண்டிலிருந்து எடுத்து செலவு செய்ய நேரிட்டிருக்கலாம். அதைச் சரி பார்த்து மீண்டும் அதை 6 மாத செலவு அளவுக்கு கொண்டு வர செலவைக் கட்டுப்படுத்துவது / நீண்ட கால சேமிப்பைக் குறைப்பது என திட்டம் தீட்டி அதை செயல்படுத்துங்கள். 

4. சிபில் ஸ்கோரை சரி பாருங்கள்
 அனைத்து நிதி நிறுவனங்களும் உங்க நம்பகத்தன்மையை சரி பார்க்க சிபில் ஸ்கோரையே உபயோகிக்கின்றன.  அதை ஆண்டுக்கொரு முறையாவது (ஆறு மாதத்திற்கு ஒரு முறை பார்ப்பது இன்னும் நல்லது) பாருங்கள். நீங்கள் வாங்காத கடன், க்ரெடிட் கார்ட் அதில் இருந்தாலோ நீங்க சரியான நேரத்தில் செலுத்திய கடன் சரியாக ரிப்போர்ட் செய்யப்படாமல் இருந்தாலோ உரிய புகார் அளித்து அதைச் சரி செய்யுங்கள் 

5. வருமான வரி விலக்கு வாய்ப்புகளை சரி பாருங்கள்

நீங்கள் வருமானவரி கட்டுபவராக இருந்தால், வரி விலக்கு வாய்ப்புகள் அனைத்தையும் உபயோக்கிறீர்களா என சரி பாருங்கள். ஒரு சில செக்சன்களில் வரி விலக்கு பெறாமல் இருந்தால் அவற்றைப் பெற என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். இந்த சப்ஜெக்ட் முழுசாத் தெரியலேன்னா ஒரு நல்ல சார்டெட் அக்கவுண்டண்ட் உதவியை நாடுங்கள். சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சம்பாதிக்கும் ரூபாயைவிட மதிப்பு மிக்கது என உணருங்கள்  

6. எஸ் ஐ பி முறையில் மியூச்சுவல் ஃபண்ட்களில் சேமிப்பைத் துவக்குங்கள். 

நீண்டகால அடிப்படையில் Inflation தாண்டி வளர்ச்சி பெற பங்குசார் முதலீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். ஓய்வு காலத்தேவை என்ன? இலக்கை அடைய இப்போது எவ்வளவு சேமிக்க வேண்டும்? தேவையான வளர்ச்சி விகிதத்துக்கு எம்மாதிரி Asset Allocation தேவை - இவற்றை முடிவு செய்து முதலீட்டைத் தொடங்குங்கள் 
இதற்கு உதவி தேவைப்பட்டால் நல்ல முதலீட்டு ஆலோசகரை நாடுங்கள் 

7. போர்ட்ஃபோலியோ ரிபேலன்சிங்

ஆண்டுக்கொரு முறை உங்க போர்ட்ஃபோலியோவை சரி பார்த்தல் மிக மிக அவசியம். முதலீடு செய்திருக்கும் ஃபண்ட்களின் செயல்பாட்டைப் பாருங்கள். திருப்திகரமாக செயல்படாத ஃபண்ட்களில் இருந்து முதலீட்டை மாற்றுங்கள். வயது ஏற ஏற ஈக்விட்டி முதலீட்டைக் குறைத்து கடன் பத்திரங்களில் முதலீட்டை அதிகரித்தல் அவசியம். அதன் படி 40,50,60 வயதை எட்டியவர்கள் உங்க குறிக்கோள் படி முதலீடுகளை மாற்றி அமையுங்கள். 
உங்க போர்ட்ஃபோலியோவில் லார்ஜ் கேப், மிட்கேப், ஸ்மால் கேப் ஃபண்ட்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கியிருப்பீர்கள். ஆண்டு இறுதியில் அவை பெரும்பாலும் அந்த சதவீதத்தில் இருக்காது. அதிலும் குறிப்பா மிட்கேப் பங்குகள் வீழ்ந்த இந்தாண்டு இறுதியில் போர்ட்ஃபோலியோவின் நிலவரம் கலவரமாக இருக்கும். கலங்காமல் அவற்றை ரீபேலன்ஸ் செய்து மீண்டும் நீங்க முடிவு செய்த சதவீதத்திற்கு கொண்டு வாங்க. என்னடா இவன் நல்ல போயிட்டு இருக்கும் பண்ட்லேருந்து எடுத்து வீழ்ந்திருக்கும் ஃபண்ட்ல போடச் சொல்றானேன்னு நினைக்காதீங்க. அது ஆப்பர்ச்சுனிட்டி, இன்னிக்கு வீழ்ந்திருக்கும் ஃபண்ட்களின் NAV கம்மியா இருக்கும், உங்க பணத்திற்கு அதிக யூனிட்கள் கிடைக்கும், நாளைக்கே அவை மீண்டு வரும் போது அதிக லாபம் கிடைக்கும். அடுத்த ஆண்டு இறுதியில் மிட்கேப்லேருந்து எடுத்து லார்ஜ் கேப் போடும் நிலைமை வரும்  

8.பர்சனல் லோன் கிரிடிட் கார்டு 
க்ரெடிட் கார்ட்  பேலன்ஸ் மற்றும் பர்சனல் லோன் இருந்தால் அவற்றை முடிக்க தீர்க்கமான திட்டம் தீட்டுங்கள். இவை இரண்டும் உங்க பொருளாதார நிலைக்கும் கேடு விளைவிக்ககூடியவை. 
க்ரெடிட் கார்ட் பேலன்ஸை உடனடியாக தீர்க்கவும். அதைத் தீர்க்கும் வரை அந்தக் கார்டை வீட்டில் வைத்து விட்டு வெளியே செல்ல முடிவு செய்யுங்கள். ரிவால்விங் க்ரெடிட் சுழலில் மாட்டி வெளியே வந்தவர்கள் சொற்பமே. 
பர்சனல் லோன் அதிகம் இருந்தால் 2023  இல் அதை முடிக்க திட்டமிடுங்கள். எந்தச் செலவையெல்லாம் தவிர்க்கலாம் என்று பாருங்கள். அதிக வட்டி கட்டும் பர்சனல் லோனை முடிக்க எமெர்ஜென்சி ஃபண்டிலும் கை வைக்கலாம், சேமிப்பையும் தற்காலிகமாக நிறுத்தலாம். 

9. கடனை திருப்பி தர எண்ணுங்கள்
நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கியிருந்தால், அவர்கள் கேட்கும் வரை காத்திருக்காதீர்கள். ஜனவரி 1 அன்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு இந்த ஆண்டு கடனைத் திருப்பித்தர ஒரு Schedule சொல்லுங்கள். அதை உறுதியாக கடைபிடியுங்கள். 

10. வரவு செலவு கணக்கைச் சரிபாருங்கள்
  பட்ஜெட் போடுபவராக இருந்தால் அதை ஒரு முறை சரி பாருங்கள். எந்தச் செலவுகளை தவிர்க்க முடியும் , எதையெல்லாம் குறைக்க முடியும் என்று பாருங்கள். இதுவரை பட்ஜெட் போட்டதில்லையென்றால், அடுத்த ஆண்டு முதல் பட்ஜெட் போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள் 

இதுக்கெல்லாம் மேல ஒண்ணு இருக்கு. ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தைக் குறைக்கப் பாருங்கள். அதற்கு பதிலாக வேலையிலோ, தொழிலிலோ அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு தேவையானதைப் படியுங்கள். எதுவுமே இல்லேன்னா, தனி நபர் சேமிப்பு குறித்து தேடிப் படியுங்கள். இப்ப இங்க வந்து எவனோ ஒருத்தன் வேலையத்துப் போய் எழுதி வச்சிருக்கும் ஆலோசனைகளை படிக்கும் நிலையிலிருந்து பிறருக்கு ஆலோசனை சொல்லும் நிலைக்கு உங்களை உயர்த்துங்கள் 

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

Post a Comment

Previous Post Next Post