செவிலியருக்கான ஒழுக்க நெறிகள்: (Code of Ethics)

செவிலியரின் ஒழுக்க நெறிகள் 1953 ஆண்டு ஜூலை திங்கள் 10ஆம் நாள், பிரேசிலில் உள்ள சாஓ பவுலோ என்னுமிடத்தில், சர்வ தேச செவிலியர் குழுமத்தால் ஏற்படுத்தப்பட்டு மீண்டும் 1964 இல் திருத்தம் செய்யப்பட்டது

1. செவிலியர்கள் நோயாளிகளுக்கு சமூக, பொருளாதார, தனிநபர் பேதமின்றியும், நோய்த் தன்மையை மனதில் கொள்ளாமலும் ஒரு மனிதனுக்குரிய மரியாதையோடு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்


2. செவிலியரின் அடிப்படைக் கடமைகள் என்பவை மக்களின் உயிரைக் காப்பது, அவர்களின் வேதனைகளைக் குறைப்பது அல்லது நீக்குவது மற்றும் அவர்களின் உடல் நலம் முன்னேற்றமடைய உதவுவது ஆகியவைகயாகும்

3. செவிலியர்கள் எப்பொழுதும் மேம்பட்ட செவிலியப் பணியை அளிக்க வேண்டும். அது போல் நன்னடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்

4. செவிலியர்கள் வெறும் பயிற்சி மட்டுமின்றி, தகுந்த அறிவும் திறமையும் கொண்டு பணிபுரிய வேண்டும், அவற்றை நாளுக்கு நாள் வளர்த்துக் கொள்ள வேண்டும்

5. நோயாளிகளின் மத நம்பிக்கைகள் மதிக்கப் பட வேண்டும்

6. செவிலியர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட தனிப்பட்ட நபர்களின் தகவல்களை அவசியமின்றி மற்றவர்களுக்கு வெளியிடக் கூடாது

7. செவிலியர்கள் தமது கடமைகளை அறிந்திருப்பதுடன், தங்கள் பணியில் தாங்கள் செய்யக்கூடாத செயல்களையும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

8. அவசர காலங்கள் தவிர மற்ற நேரங்களில் மருத்துவரின் அனுமதியின்றி நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைக்கக் கூடாது. அவ்வாறு அவசர காலங்களில் மருந்துகள் கொடுக்கப்பட்டால் அவற்றை உடனடியாக மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும்

9. செவிலியர்கள் மருத்துவரின் பரிந்துரையின்படி அறிவுடனும், மேன்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும், அதே சமயம் தீய நடத்தைகளில் பங்கெடுக்க அவர்களால் அறிவுறுத்தப்பட்டால் மறுக்க வேண்டும்

10. செவிலியர்கள் தங்களது செவிலியச் சேவைகளுக்கும், தீர்மானங்களுக்கும் தங்களே பொறுப்பாவார்கள்

11. செவிலியர்கள் அனைத்து பணியாளர்களுக்கும் நம்பிக்கைக்குரியவர்களாகத் திகழ வேண்டும், அதே சமயம் அவர்கள் நோயாளிக்கு தவறான சிகிச்சை அளிப்பதையோ அல்லது நோயாளிகளிடம் தவறாக நடப்பதையோ தகுந்த அதிகாரிகளிடம் வெளிப்படுத்த வேண்டும்

12. செவிலியர்கள் நோயாளிகள் மற்றும் பொது மக்களின் நலம் அல்லது பாதுகாப்பு மற்றவர்களின் திறமையற்ற தவறான சிகிச்சை முறைகளால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும்

13. செவிலியர்கள் மற்ற மருத்துவக் குழுவுடன் ஒத்துழைப்பதுடன், மற்றவர்களுடனும், பிற செவிலியர்களுடனும் நல்ல தோழமையுணர்வுடனும் அமைதியான முறையிலும் பழக வேண்டும்

14. செவிலியர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக நெறிமுறைகளுடன் வாழ வேண்டும். ஏனென்றால் ஒரு செவிலியரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையானது ஒட்டு மொத்த செவிலியத் துறையையும் பிரதிபலிக்கிறது

2 Comments

  1. Thank You. Good Tamil Translation.

    ReplyDelete
  2. By this Comment, I am greeting all the Staff Nurses Who are Working in PHCs and GHs And Medical College Hospitals like me. Let all of us keep Good Moral Activities and Thrive our Talents.Patients are our best Teachers. Without Patients we can't learn anything.Let us Show our real care and concern to patients and real unity to others.

    ReplyDelete
Previous Post Next Post