உலக செவிலியர்கள் தினம்: வைகோ வாழ்த்து


சென்னை, மே.11: 
நாளை உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலர் வைகோ செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: 

நவீன தாதியியல் முறையை உருவாக்கி முதலில் செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் துவக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12-ஆம் நாளை 1965 -ஆம் ஆண்டு முதல் உலக செவிலியர் தினமாக அறிவிக்கப்பட்டது. 

இங்கிலாந்தில் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சஸ் நைட்டிங்கேல் தம்பதியர்க்கு இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் பணியாற்றிய போது 12.5.1820 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு அந்நகரின் நினைவாகவும் தன் குடும்ப பெயரான நைட்டிங்கேல்யையும் இணைத்து புளோரன்ஸ் நைட்டிங்கேல் என்று பெயர் வைத்து அழைத்தனர்.

 இறைவனால் தனக்குப் பணிக்கப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையை உணர்ந்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் புளோரன்ஸ் நைட்டிங்கேல்.

1854-56 ஆம் ஆண்டு ரஷ்யப் பேரரசுக்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும் இங்கிலாந்து அரசுஓட்டோமான் பேரரசுக்கும் இடையே கிரிமியனில் நடைபெற்ற போரில் காயம்பட்டு குற்றுயிரும் குலைஉயிருமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க புளோரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று போர்முனைக்கு அனுப்பப்பட்டது. 

இடைவிடாது இரவு பகல் பாராமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்தும் ஆறுதல் மொழி பேசியும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் தேற்றி வந்தார். 

இரவு நேரங்களில் வலிதாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தவர்களைக் கையில் இராந்தல் விளக்கை எடுத்துக் கொண்டு சுகம் விசாரித்து அவர்களின் வலிக்கு மருந்துகளைக் கொடுத்து, அவர்களைப் பற்றிய தகவலைத் திரட்டி அவர்தம் குடும்பத்தினர்க்குத் தகவல் சொல்லி அவர்களின் மனச்சுமையை போக்கி இராணுவ வீரர்களை விரைந்து குணப்படுத்தினார். 

இதை கண்ட இராணுவ வீரர்கள் ‘தங்களைக் காக்க விண்ணுலகிலிருந்து தேவதையொன்று மண்ணுலகிற்கு கையில் விளக்குடன் வந்துள்ளது’ என்று புகழ்ந்து பாராட்டினர்; விளக்கேந்திய பெருமாட்டி  என்று வர்ணித்தனர். 

போருக்குப் பின் நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விக்டோரியா மகாராணிக்கு அடுத்தபடியாக அறியப்பட்டவராக பி.பி.சி. அறிவித்தது.

விக்டோரிய மகாராணி 1883-ஆம் ஆண்டு புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு செஞ்சிலுவை விருதும், 1907 ஆம் ஆண்டு பிரித்தானிய மன்னரின் ஆர்டர் ஆஃப் மெரிட் என்னும் உயரிய விருதையும் பெற்ற முதல் பெண்மணியாக கௌரவிக்கப்பட்டார். 

சாதாரண மருத்துவ சேவையில் துவங்கி, காலரா போன்ற கொடிய கொள்ளை நோய் பரவி இருக்கும் இடங்களிலும், போர் மேகம் தவழும் யுத்த பூமியிலும் துணிவுடன் பணியாற்றி வந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் 13.8.1910 ஆம் ஆண்டு உலக வாழ்க்கையைத் துண்டித்து மரணம் அடைந்தார். 


அவர் நினைவாக ஆண்டுதோறும் அவர் பிறந்த மே 12 ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் அங்குள்ள செவிலியர்களால் அந்த மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அந்நாளில் வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாற்றப்பட்டு அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படுகிறது. இது ஓர் உணர்வுப்பூர்வமானது

ஒரு செவிலியரிடமிருந்து மற்றொருவருக்குத் தமது அறிவையும், அனுபவத்தையும், மனித நேயத்தையும் தோள் மாற்றம் செய்வதாக ஆண்டுதோறும் இந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வு  நடைபெற்று வருகிறது.

செவிலியர் பணி தொழில் அல்ல; மனதிற்கு திருப்தி அளிக்கக்கூடிய மனித நேய சேவை. தாய்க்கு நிகரான சகிப்புத் தன்மை கொண்டு, தரப்படும் ஊதியத்திற்கு அப்பாற்பட்டு அழுகும் புண்களையும் தொட்டுத் தடவி சிகிச்சை செய்யும் சேவை மகத்தானது. இதை நினைவுகூர வேண்டியது நம் சமூகக் கடமை. 

புளோரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் தொடர்ந்து தொண்டு செய்து வரும் செவிலியர்களை இனங்கண்டு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் அவர்களைக் கௌரவிப்பதே நாம் வழங்கும் அங்கீகாரமாகும்.

அன்னை தெரசா, “ஆண்டவனை எங்கே தேடுகிறார்கள் வறியவர்களும், நோயுற்றவர்களும் துன்பப்படுகின்றவர்களும் ஆறுதல் அடையும் போது அவர்கள் முகத்தில் தவழும் புன்னகையில் இறைவன் உள்ளார்,” என்று சொன்னார்.


உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களை நியமித்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. 

உலக சுகாதார நல நிறுவனம் மற்றும் இந்தியன் நர்சிங் கவுன்சில் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனைத்து அரசு பொது மருத்துவ மனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர், மூன்று குழந்தை நோயாளிகளுக்கு ஒரு செவிலியர், ஐந்து நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என நோயாளிகளின் நலன் கருதி  அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குறைந்தபட்சம் ஐந்து செவிலியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். 

ஆனால் 2012-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி ஒட்டுமொத்த இந்தியாவுக்கு 11 இலட்சம் செவிலியரும், தமிழகத்துக்கு 50 ஆயிரம் செவிலியரும் பற்றாக்குறையாக உள்ளது.

மருத்துவரின் பணி என்பது நோய் அறிதல் மற்றும் அதற்கு எந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதாக இருக்கும். 

ஆனால், செவிலியர்கள் அந்த மருந்துகளை முறையாக வழங்கி தொடர்ந்து நேரம் காலம் பார்க்காமல் நோயாளிகளைப் பராமரித்து குணப்படுத்துவோராக உள்ளனர். 

அவர்களுக்குப் போதுமான ஊதிய உயர்வு வழங்கி கண்ணியப்படுத்த வேண்டும். இந்திய மருத்துவ சமுதாயம் இன்னும் முழுமையாகக் குணப்படுத்த முடியாத புற்றுநோய், எய்ட்ஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு நவீன மருத்துவ விஞ்ஞான உலகம் மருந்தை கண்டுபிடிக்க வேண்டும், 

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எல்லாவித நோய்க்கும் தடுப்பூசி மருந்துகளும், நவீன மருத்துவ கருவிகளும் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

அனைவருக்கும் தரமான கல்வியும் மருத்துவமும் அரசே இலவசமாக வழங்க வேண்டும் என்பது எனது ஆவல். 

அது மெய்ப்பட உலக செவிலியர்கள் தினமான  மே 12-இல் உறுதி ஏற்று புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியுள்ள அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த செவிலியர் தின வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு வைகோ தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
Tamilnadu Nurse



தமிழக சுகாதாரத்துறையில்
உறங்கிக் கிடக்கும்
ஓர் உலக சமுதாயத்தை
உயிர்த்தெழச் செய்யும்
முதல் முயற்சி TNNurse.org.

Post a Comment

Previous Post Next Post