தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் கடன், மருத்துவக் காப்பீட்டுக்கான நிதயுதவி உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் கடனின் உச்சவரம்பு ரூ. 25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மருத்துவக் காப்பீட்டுக்கான நிதயுதவியையும் ரூ.4 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிகரித்து வரும் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும் வீடு கட்டும் முன்பண கடன் உச்சவரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தியும், அகில இந்தியப் பணி அலுவலர்களுக்கான வீடு கட்டும் முன்பண உச்சவரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தி, வரும் நான்கு ஆண்டுகளுக்கு அதாவது ஜூலை 1-ம் தேதி முதல் 2016 ஏப்ரல் 30-ம் தேதி வரை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.

இந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 52 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுடன் கூடுதலாக 61 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளலாம்.

அதன்படி, 113 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மருத்துவக் காப்பீட்டு நிதி உதவியான ரூ.2 லட்சம் என்பது ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அளவுக்கு உள்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் அரசு ஊழியர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் அரசுப் பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்ற பணியாளர்கள், உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசின் கீழ் வரும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 13 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
l
j