Mumbai Nurse Aruna Shanbaug Dies

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடந்த 42 ஆண்டுகளாக சுயநினைவின்றி (கோமா) மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் அருணா ஷான்பாக் திங்கள்கிழமை மரணமடைந்தார்.

மும்பையில் உள்ள KEM மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர் அருணா ஷான்பாக். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு மருத்துவமனையின் வார்டு உதவியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

 கடந்த 42 ஆண்டுகளாக கோமா நிலையில் KEM மருத்துவமனையில் இருந்த அவர் திங்கள்கிழமை மரணமடைந்தார்.

 ஆளுநர் இரங்கல்: அருணாவின் மரணம் குறித்து மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் திங்கள்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:
"அருணாவின் இழப்பு, நம் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது; மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைந்த பிரார்த்திக்கிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் இரங்கல்: மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தன் சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் வெளியிட்ட இரங்கல் செய்தி:
"அருணாவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் அவர் அவதியுற்றதைப் பார்த்தபோது என் மனம் வேதனை அடைந்தது.
 இத்தனை ஆண்டுகள் அவருக்கு மனிதாபிமான அடிப்படையில், KEM மருத்துவமனை செவிலியர்கள் ஆற்றிய சேவைக்குத் தலை வணங்குகிறேன்' என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

 அசோக் சவாண் இரங்கல்: மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "அருணாவின் மரணம், உணர்வுப்பூர்வமான மனநிலையைக் கொண்ட ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 செவிலியராக சேவையாற்றும் கனவுகளோடு இருந்த அருணா, தன் வாழ்நாள் முழுவதையும் மருத்துவமனைப் படுக்கையிலேயே கழிக்க வேண்டியிருந்தது.
 இது மிகவும் கொடூரமான தலைவிதியாகும். எனினும் அந்த விதியை மன உறுதியுடன் போராடினார்' என்று தெரிவித்தார்.

 பின்னணி: மும்பையில் உள்ள KEM மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர் அருணா ஷான்பாக். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ஆம் தேதி மருத்துவமனையின் வார்டு உதவியாளர் சோஹன்லால் பார்த்தா வால்மீகி என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

 அப்போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால் அவரது மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் தடைபட்டதில் அவர் சுயநினைவை இழந்தார். 

இதையடுத்து KEM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செவிலியர்களால் கவனிக்கப்பட்டு வந்தார்.

 நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் நிகழ்ந்து 38 ஆண்டுகள் கழித்து, அதாவது ஜனவரி 24-ஆம் தேதி, 2011-ஆம் ஆண்டு பத்திரிகையாளர் பிங்கி விரானி என்பவர் மருத்துவக் குழுவினர் மூலம் அருணாவை "கருணைக் கொலை' செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை அதே ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
 
இதனிடையே, தாக்குதல், கொள்ளையடித்தல் வழக்குகளின் கீழ் மட்டுமே சோஹன்லாலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

 கருணைக் கொலை செய்வது குறித்து இந்தியா முழுவதும் விவாதத்துக்குள்ளான அருணா, இறந்ததைத் தொடர்ந்து அவரது நீண்ட நாள் மரணப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

நன்றி
தினமணி 19-5-2015

Post a Comment

Previous Post Next Post