Increase Nurses Salary, Dr. Anbumani Ramadoss, Demands TN Govt

செவிலியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்" - அன்புமணி வலியுறுத்தல்!!



தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு அரசு ஊதியத்துக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 


இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
உயிர்காக்கும் மருத்துவ துறையில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்களுக்கு, அவர்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தேவையான ஊதியம்கூட வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.


உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட ஊதியக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்த, மத்திய அரசு ஆணையிட்டும் அதை மாநில அரசுகள் மதிக்காதது கண்டிக்கத்தக்கது. 


செவிலியர்களின் பணி மகத்தானது.
சொந்த சோகங்களை மறைத்து புன்னகையுடன் பணி செய்வது உள்ளிட்டவை செவிலியர்களின் தியாகங்கள் அளவிட முடியாதது என்றார்.


ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது மிக மிகக் குறைவு. மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.


சென்னையில், சாதாரண மருத்துவமனைகளில் ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை மட்டுமே தொடக்க நிலை ஊதியமாக வழங்கப்படுகிறது. 


அதேநேரத்தில், செவிலியர்கள் வரையறுக்கப்பட்ட பணி நேரம் இல்லாமல் அதிக நேரம் பணிசெய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.


சமீபத்தில், கேரளத்தில் தனியார் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.20,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தில், தனியார் மருத்துவமனை செவிலியர்களின் நிலை மிகமிகப் பரிதாபமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதல் ஊதியத்தைப் பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.


மத்திய அரசு வழங்கியுள்ள அறிவுரைப்படி 50 படுக்கைகளுக்குக் குறைவாக உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு, குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்பட வேண்டும். 50 முதல் 100 படுக்கை வரை உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு, அரசு செவிலியருக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 25 சதவிகிதம் குறைவாகவும், 100 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனை செவிலியர்களுக்கு 10 சதவிகிதம் குறைவாகவும், 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு, அரசு ஊதியத்துக்கு இணையான ஊதியமும் வழங்கப்பட வேண்டும். 


இதற்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி, தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு, அரசு செவிலியருக்கு இணையான ஊதியம் வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
Dailyhunt

Post a Comment

Previous Post Next Post