வீழ்ச்சி அடையும் செவிலியர் எண்ணிக்கை

இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப செவிலியர்கள் இல்லாததது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து இருக்கிறது. நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு லட்சம் செவிலியர்கள் உருவாகும் போதிலும் அது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை என்பதே மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

மருத்துவ உலகில் செவிலியர் பங்கு மகத்தானது. நோயின் தன்மை அறிந்து மருத்துவர் சிகிச்சை அளிக்கும் போது அவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை சரியான நேரத்தில், சரியான அளவில் நோயாளிகளுக்கு வழங்குவதோடு அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கனிவோடும், சகிப்புத்தன்மையோடும் பணியாற்றும் உன்னதமான சேவை மனப்பான்மை கொண்டவர்கள் தான் செவிலியர்கள். 

சர்வதேச அளவில் இந்திய செவிலியர்களுக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. அதனால்தான் இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான செவிலியர்கள் உலகின் பல நாடுகளில் சேவையாற்றி வருகிறார்கள். அரபு நாடுகளில் பணிபுரியும் செவிலியர்களில் சுமார் 50% பேர்  இந்தியர்களே.

ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஆயிரம் பேருக்கு மூன்று செவிலியர் இருக்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் அளவுகோலாகும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை ஆயிரம் பேருக்கு மூன்று செவிலியர்கள் என்பது  1.9 என்ற அளவில் மட்டுமே உள்ளது. அதாவது 1000 பேருக்கு இரண்டு செவிலியர்கள் கூட இல்லை என்பதுதான் உண்மை. இது பொதுமக்களின் சுகாதார பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடியதாகும். அதுவும் கொரோனா போன்ற பெருந்தொற்று ஏற்படும் காலங்களில் செவிலியர் பற்றாக்குறை மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

அதனால்தான் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தனது கவலையை வெளிப்படுத்தி இருக்கிறது.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே செவிலியர் எண்ணிக்கை விகிதாச்சாரம் குறைவாக இருக்கும் நிலையில், அவர்களுக்கான வாய்ப்பு வசதிகள் சரியான முறையில் இல்லாததால் வேலை வாய்ப்புக்காக இளம் தலைமுறை செவிலியர்கள் அதிக அளவில் அயல்நாடுகளுக்கு இடம்பெயருகிறார்கள். 

இதனை உன்னிப்பாக கவனித்து வரும் வல்லுனர்கள் குழு, நாட்டின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதில் செவிலியர்களின் இடம் பெயர்வு மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விடும்  என எச்சரிக்கிறார்கள். 
செவிலியர்களுக்கு தேவையான பயிற்சிகளை இங்கேயே வழங்குவதும், மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப அவர்களை தயார்படுத்துவதும் மிக அவசியம் என தெரிவித்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி செவிலியர்களின் வாழ்க்கை பாதுகாப்புக்கு அரசின் ஆதரவும் மிக முக்கியமானது என மருத்துவர் குழு அறிவுறுத்தி இருக்கிறது. 

பணிச்சுமை, அதிகப்படியான இரவுப்பணி, நீடித்த பணி நேரம், போதுமான ஊதியம் இல்லாமை போன்றவை செவிலியர்கள் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனைகள் ஆகும்.

ஒரு நாட்டின் சுகாதாரத்துறை தொடர்பான நடவடிக்கைகளில் செவிலியர் பங்கு மகத்தானது. சிகிச்சை, நோய் தடுப்பு, கவனிப்பு மற்றும் புனரமைப்பு ஆகியவற்றில் அவர்களின் பங்கு இன்றியமையாத ஒன்று. மற்ற தொழில்களைப் போலவே செவிலியர் பணியும் அதிநவீன தொழில்நுட்பம் காரணமாக பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. மருத்துவத்துறையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் தொடர்ந்து பயன்பாட்டிற்கு வரும் போதிலும், செவிலியர்களின் பங்கை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஆகவே செவிலியர்களுக்கான பணி சூழல் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். பணியின் போது அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவத்துறையில் சுமார் 2 லட்சம் செவிலியர்கள் காலடி வைக்கும் அதே நேரம், அவர்களில் 40 முதல் 50 சதவீதம் பேர் பயிற்சித் திறன் மற்றும் அனுபவத்தை பெற்ற பிறகு வெளிநாடுகளுக்கு செல்வதாலேயே இந்திய சுகாதாரத் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. 

உள்நாட்டில் செவிலியர்களின் திறமைக்கும், சேவைக்கும் ஏற்ற வாய்ப்பு வசதிகள் மறுக்கப்படுவதாலேயே இந்த நிலை ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; 

அப்போதுதான் நம் நாட்டில் படித்து முடிக்கும் செவிலியர்கள் நம் நாட்டிலேயே மக்களுக்கு சேவையாற்ற முடியும். 
இந்தியாவில் பொதுமக்களுக்கும், செவிலியர்களுக்கும் இடையிலான விகிதாச்சார இடைவெளியை குறைக்க இதுதான் வழி என்பதை மருத்துவ உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post