மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வளரிளம் பெண்களுக்கான சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தினை இன்று (27.3.2012) துவங்கி வைத்தார்


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (27.3.2012) தலைமைச் செயலகத்தில் 44 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் வளர் இளம் பெண்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொற்று நோய்கள் மற்றும் கருவுறுதல் தடைபடுவதை குறைப்பதற்காக சானிடரி நாப்கின்கள் (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.

இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களில் உள்ள 10 முதல் 19 வயது வரை உள்ள வளர் இளம் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் ஆகியோர் நலனுக்காக இலவசமாக சானிடரி நாப்கின்கள் (Sanitary Napkins) வழங்கப்படும்.

கிராமத்தில் வாழும் இளம் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு சானிடர் நாப்கின்கள் (Sanitary Napkins) கொண்ட ஒரு பை வீதம், மூன்று பைகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் 18 பைகள் ஒவ்வொரு வளர் இளம் பெண்ணுக்கும் வழங்கப்படும்.

இந்த சானிடரி நாப்கின்கள் அரசு பள்ளிகளில் பயிலும் வளர் இளம் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவும், மற்ற வளர் இளம் பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட மையங்களில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும் வழங்கப்படும்.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராம சுகாதார துணை நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 6 சானிடரி நாப்கின்கள் கொண்ட ஏழு பைகள் வழங்கப்படும்.

இதுவன்றி சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகளுக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆறு சானிடரி நாப்கின்கள் கொண்ட மூன்று பைகள் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும், சுமார் 40 லட்சம் வளர் இளம் பெண்கள், 7 லட்சம் பிரசவித்த தாய்மார்கள், 700 பெண் கைதிகள் மற்றும் மனநல மருத்துவமனைகளில் உள்ள 500 பெண் நோயாளிகள் பயன் அடைவார்கள்.

மேலும், இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு பெண்ணிற்கும் வளர் இளம் பெண்கள் நலக் குறிப்பேடு வழங்கப்பட உள்ளது. வளர் இளம் பெண்களின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு எடை, உயரம், ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு ஆகியவை இந்தக் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டு அவர்களின் நலன் கண்காணிக்கப்படும்.

வளர் இளம் பெண்களின் ரத்த சோகை தடுப்புத் திட்டமாக ஒவ்வொரு பெண்ணிற்கும் வாரந்தோறும் ஒரு இரும்பு சத்து மற்றும் போலிக் அமில மாத்திரை வழங்கப்படும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடல்புழு நீக்க மாத்திரையும் வழங்கப்படும்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று ஏழு வளர் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் (Sanitary Napkins) வழங்கி, திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். இந்த திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படவிருக்கிறது.

இந்தப் புதிய திட்டத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 44 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவாகும். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள், தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
Tamilnadu Nurse



தமிழக சுகாதாரத்துறையில்
உறங்கிக் கிடக்கும்
ஓர் உலக சமுதாயத்தை
உயிர்த்தெழச் செய்யும்
முதல் முயற்சி TNNurse.org.

Post a Comment

Previous Post Next Post